மராட்டியத்தில் புதிதாக 2,544 பேருக்கு மட்டுமே கொரோனா 60 பேர் பலி


மராட்டியத்தில் புதிதாக 2,544 பேருக்கு மட்டுமே கொரோனா 60 பேர் பலி
x
தினத்தந்தி 16 Nov 2020 4:05 AM IST (Updated: 16 Nov 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

மும்பை, 

நாட்டிலேயே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மாநிலங்களில் மராட்டியம் தான் முதல் இடம் வகிக்கிறது.

இங்கு தான் அதிகப்படியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், ஏராளமானோர் இறந்துள்ளனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக மராட்டியமும் நோய் பாதிப்பில் இருந்து படிபடியாக விடுபட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று மராட்டியம் முழுவதும் 2 ஆயிரத்து 544 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு பிறகு தற்போது தான் ஒரே நாளில் குறைவாக கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

60 பேர் இறப்பு

தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சேர்ந்து இதுவரை மாநிலம் முழுவதும் 17 லட்சத்து 47 ஆயிரத்து 242 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

நேற்று மேலும் 60 பேர் இந்த கொடிய நோய்க்கு இறந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 45 ஆயிரத்து 974 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 3 ஆயிரத்து 65 பேர் நேற்று கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்ந்து இதுவரை 16 லட்சத்து 15 ஆயிரத்து 379 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு உள்ளனர். தற்போது 84 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 92.45 ஆகவும், இறப்பு விகிதம் 2.63 ஆகவும் உள்ளது.

மராட்டியத்தில் உள்ள முக்கிய நகரங்களான தானே, புனே, நாக்பூர் போன்ற பகுதிகளிலும் நோய் பாதிப்பு குறைந்துள்ளது.

Next Story