பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்: சிறையில் இன்று தீபாவளியை கொண்டாடும், வினய் குல்கர்னி


பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்: சிறையில் இன்று தீபாவளியை கொண்டாடும், வினய் குல்கர்னி
x
தினத்தந்தி 16 Nov 2020 5:00 AM IST (Updated: 16 Nov 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி, சிறையிலேயே இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார். இதனை பலரும் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

பெலகாவி, 

தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தவர் யோகேஷ் கவுடா. பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அரசியல் விரோத காரணத்தால் யோகேஷ் கவுடாவை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி கூலிப்படையை ஏவி கொன்றதாக தகவல்கள் வெளியாகின.

அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதலில் வினய் குல்கர்னியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த 5-ந் தேதி அவரை கைது செய்தனர். தற்போது அவர் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வருகிற 23-ந் தேதி வரை அவரை சிறையில் அடைத்திருக்க தார்வார் கோர்ட்டு உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனி அறையில் அடைப்பு

இதற்கிடையே ஹிண்டல்கா சிறையில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி தனி அறையில் அடைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக சிறையில் அடைக்கப்படும் விசாரணையில் முதலில் தனிமையில் அடைக்கப்படுவது வழக்கம். அதுபோல்தான் வினய் குல்கர்னியும் தனிமையில் அடைக்கப்பட்டு உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர் தனது அறையில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறாராம். சிறை அதிகாரிகள் கேட்டதற்கு தான் நடைபயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்தாராம். நேற்று காலையில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள வினய் குல்கர்னி உள்ளிட்ட விசாரணை கைதிகளுக்கு சிறையில் இட்லி கொடுக்கப்பட்டது.

தீபாவளி வாழ்த்து

அதை வினய் குல்கர்னி சாப்பிட்டுள்ளார். மேலும் மதியம் சாப்பாடும், இரவு சப்பாத்தி, தக்காளி சாதம், சாப்பாடு ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதையும் வினய் குல்கர்னி வாங்கி சாப்பிட்டுள்ளார். மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற உணவுகளைத்தான் வினய் குல்கர்னிக்கு கொடுத்ததாகவும், அவருக்கென்று தனியாக உணவுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று(திங்கட்கிழமை) ஹிண்டல்கா சிறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அப்போது விசேஷ பூஜைகளும், கைதிகளுக்கு சுவையான உணவுகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கிடையே வினய் குல்கர்னியின் முகநூல் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவு வெளியாகி உள்ளது.

முகநூல் பக்கத்தில்...

அதில், “தீபாவளி அன்று ஏற்றப்படும் தீபம் நம் வாழ்வில் உள்ள தொந்தரவுகள், பிரச்சினைகள், துக்கங்கள் ஆகியவற்றை எரித்து சாம்பலாக்கி விடும். இந்த நன்னாளில் நாம் அனைவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி எப்படி தனது முகநூல் பக்கத்தில் இந்த கருத்தை பதிவிட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சிலர் வினய் குல்கர்னி சிறையில் தீபாவளியை கொண்டாடப் போகிறார் என்று கிண்டலாக தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story