அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி கூடுதல் நேரம் பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க புதுவை அரசு அனுமதி அளித்திருந்தது. அதாவது காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருந்தபோதிலும் தீபாவளி தினமான நேற்று முன்தினம் பகல் நேரத்தில் மழை இல்லாமல் இதமான சூழல் நிலவியதால் காலை முதலே மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதற்கிடையே அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக புதுவை போலீசார் 30 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வாலிபர் கைது
அதாவது பெரியகடை, ஒதியஞ்சாலை, காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையங்களில் தலா 4 வழக்குகளும், முத்தியால்பேட்டையில் 3 வழக்கும், கோரிமேடு, காலாப்பட்டு, வில்லியனூர், உருளையன்பேட்டை, ஏனாம், கிருமாம்பாக்கத்தில் தலா 2 வழக்குகளும், நெட்டப்பாக்கம், மேட்டுப்பாளையம், திருபுவனையில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக பகுதியான குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 25) என்பவர் அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மடுகரை மந்தைவெளி திடலில் பட்டாசு வெடித்துள்ளார். அவரை மடுகரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story