ராஜாக்கமங்கலம் அருகே போதையில் தகராறு; எலக்ட்ரீசியன் படுகொலை வாலிபர் கைது


ராஜாக்கமங்கலம் அருகே போதையில் தகராறு; எலக்ட்ரீசியன் படுகொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2020 12:24 PM IST (Updated: 16 Nov 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே போதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே வைராகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரெகுராஜன் (வயது58), எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. ரெகுராஜனுக்கு மது பழக்கம் உண்டு. தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால், இவரது மனைவியும் மகள்களும் பிரிந்து சென்று தம்மத்துக்கோணம் அருகே ஞானம்காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இதையடுத்து ரெகுராஜன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் ரெகுராஜன் வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பிணம் கிடந்த அறையில் மின்சார சுவிட் போர்டு திறக்கப்பட்டு ஒயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இதனால், அவர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

பின்னர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராஜா மகன் ராஜா (32) என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரெகுராஜனின் வீட்டின் எதிரே ராஜாவின் அண்ணன் ராஜசேகர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ரெகுராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து வந்துள்ளார். இதை ராஜா பலமுறை கண்டித்து வந்துள்ளார். ஆனால், ரெகுராஜன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. சம்பவத்தன்று ரெகுராஜன் அதிக மது போதையில் வந்து ராஜசேகர் குடும்பத்தினரை தரக்குறைவாக அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா இரவில் அரிவாளுடன் ரெகுராஜனின் வீட்டுக்குள் சென்றார். அங்கு போதையில் இருந்த ரெகுராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவர் இறந்து விட்டதாக எண்ணி வெளியே சென்றார்.

பின்பு நள்ளிரவு ராஜா மீண்டும் ரெகுராஜன் வீட்டுக்கு சென்றார். அப்போது ரெகுராஜன் காயங்களுடன் துடித்து கொண்டிருந்தார். உடனே, அருகில் கிடந்த சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார். தொடர்ந்து அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக காட்டி கொள்வதற்காக வீட்டில் இருந்த மின்சார சுவிட் போர்ட்டை கழற்றி ஒயர்களை கீழே தொங்க விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தன.

இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதையில் தகராறு செய்த எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story