திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 10 லட்சத்து 15 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியில் 10 லட்சத்து 15 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர் என கலெக்டர் சாந்தா கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று வெளியிட்டார். பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்று கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 978 வாக்காளர்கள் உள்ளனர். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 819 வாக்காளர்களும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 920 வாக்காளர்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 838 வாக்காளர்களும் உள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 15 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 18 வயது நிறைவடைந்து இது நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், 2021 ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், பெயர் நீக்கம், திருத்தம் செய்து கொள்ள அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகள், அடுத்த மாதம் (டிசம்பர்) 12 மற்றும் 13-ந் தேதிகள் என 4 நாட்கள் நடக்கிறது. வாக்காளர் பட்டியல்களை http://el-e-ct-i-ons.tn.gov.in என்ற வலைவளத்தில் காணலாம். மேலும் www.nvsp.in என்ற வலைதளத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தினகரன், உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், புண்ணியக்கோட்டி, தேர்தல் தாசில்தார் சொக்கநாதன் மற்றும் அனைத்து தாசில்தார், நகராட்சி ஆணையர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story