வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 9.74 லட்சம்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் புதுவை மாநிலத்தில் 9 லட்சத்து 74 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர்.
புதுச்சேரி,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1-1-2021-ஐ தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள அதிகாரிகள் அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருப்பதுடன் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தல் படிவங்களை பெற்றுக்கொள்வர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருண் நேற்று வெளியிட்டார். அதை அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பாலமுருகன், பாரதீய ஜனதா கட்சி நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கீதநாதன், காங்கிரஸ் கட்சி சூசைராஜ், தேசியவாத காங்கிரஸ் ராஜாராம், தி.மு.க.வை சேர்ந்த லோகையன், நடராஜன், ஸ்ரீதர், அ.தி.மு.க.வை சேர்ந்த அன்துவான் சூசை, கமல்தாஸ், என்.ஆர்.காங்கிரஸ் ராஜாராம், பா.ம.க.வை சேர்ந்த சத்தியநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
9.74 லட்சம் வாக்காளர்கள்
புதுவை மாநிலத்தில் 9 லட்சத்து 74 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 989 பேர் ஆண்கள், 5 லட்சத்து 15 ஆயிரத்து 660 பேர் பெண்கள், 105 பேர் 3-ம் பாலினத்தவர் ஆவர். 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக 13 ஆயிரத்து 475 பேர் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 952 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதாவது புதுவை மாவட்டத்தில் உள்ள 25 தொகுதிகளில் 789 வாக்குசாவடிகளும், காரைக்கால் மாவட்டத்தில் 163 வாக்குசாவடிகளும் உள்ளன.
வில்லியனூர்
புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் வில்லியனூரில் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 617 வாக்காளர்களும், உருளையன்பேட்டையில் குறைந்தபட்சமாக 24 ஆயிரத்து 92 வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான மறுசீரமைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அர்ஜூன் சர்மா வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 529 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 72 ஆயிரத்து 408, பெண் வாக்காளர்கள் 84 ஆயிரத்து 104 பேர் அடங்குவர். மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் உள்ளனர்.
Related Tags :
Next Story