தென்காசியில் வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் சமீரன் வெளியிட்டார்
தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சமீரன் வெளியிட்டார்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று காலை தென்காசி உதவி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தென்காசி உதவி கலெக்டர் (பொறுப்பு) சரவண கண்ணன், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருக செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரகதநாதன், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ஹென்றி பீட்டர் மற்றும் தாசில்தார்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பேட்டி
பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 14-2-2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 3 ஆயிரத்து 308 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 40 ஆயிரத்து 488. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 62 ஆயிரத்து 764. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 56 பேர் உள்ளனர். அதன்பின் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 31-10-2020 முடிய 3 ஆயிரத்து 438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 15 ஆயிரத்து 65 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண் வாக்காளர்கள் அதிகம்
இதன்பின் தற்போது மொத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681. இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 34 ஆயிரத்து 450. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 57 ஆயிரத்து 191. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 40 பேர் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி நடப்பு மாதத்தில் 21, 22 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் சேர்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அரசு அறிவித்ததும் விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.
குற்றாலம் செல்ல அனுமதி கிடைக்குமா?
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் செயல்பாட்டினால் கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ளது. இங்கு சுற்றுலா தலம் குற்றாலம் உள்ளது. அருகில் பிற மாநில எல்லை அமைந்துள்ளது. எனவே நோயின் தாக்கம் இன்னும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் பரவுதல் முழுமையாக குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story