வரைவு பட்டியல் வெளியீடு தூத்துக்குடியில் 14 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்
தூத்துக்குடியில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2021-ல் நடக்கிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், சந்தனம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், இந்திய கமயூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், வரதராஜ், அசோக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்விராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 856 வாக்காளர்களும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 87 வாக்காளர்களும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 150 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 640 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 526 வாக்காளர்களும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 173 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 7 லட்சத்து 7 ஆயிரத்து 905 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 36 ஆயிரத்து 397 பெண் வாக்காளர்கள், 130 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 ஆயிரத்து 505 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளனர்.
சிறப்பு முகாம்
வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு 15.12.20 வரை விண்ணப்ப படிவங்கள் அளிக்கலாம். மேலும், 01.01.2021 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அதாவது 31.12.2002 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) , 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) , அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் விண்ணப்பபடிவங்களை கொடுத்து பயன்பெறலாம். வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொதிக்கும் ஒரு மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் மொத்தம் 1, 603 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story