மீட்பு, நிவாரண பணிகளில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் அமைச்சர் வலியுறுத்தல்
பருவமழையின்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளின்போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் போது அந்த பகுதியில் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்றி மழைநீர் வடிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிருமி நாசினி
சாலைகளில் முறிந்து விழும் மரங்களை விரைவாக அப்புறப்படுத்த வேண்டும். தொற்றுநோய் பரவாமல் இருக்க சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து செயல்பட்டு கிருமி நாசினி தெளித்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை கலெக்டர்கள் அஸ்வின் சந்துரு, சக்திவேல், தமிழ்செல்வன், சுதாகர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story