வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2020 12:24 AM GMT (Updated: 19 Nov 2020 12:24 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் அண்ணா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 


குடியரசு தினவிழாவில் வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு அண்ணா விருதை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். இந்த விருது தீயணைப்பு துறை, போலீஸ் துறை, பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படையினர் பல்வேறு நிகழ்வுகளான இயற்கை பேரழிவுகள், விபத்து, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுத்து வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வீர, தீர செயல்கள் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-9 என்ற முகவரியிலோ அல்லது http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் விண்ணப்பதாரரின் பரிந்துரையை நியாயப்படுத்தும் வகையில் விரிவான அறிக்கை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், தூத்துக்குடி-1 என்ற முகவரியில் இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 0461-2321149, 74017 03508 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story