பெங்களூரு டவுன்ஹாலில் உள்ள தாசப்பா ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம்
பெங்களூரு டவுன்ஹாலில் உள்ள தாசப்பா ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
இந்தியா உள்பட உலக நாடுகளை ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசிடம் இருந்து மக்களை காக்க இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்து பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதில் இந்தியாவில் வேக்ஷின் என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனைகள் முடியும் தருவாயில் உள்ளன. அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் வேக்ஷின் தடுப்பூசி 30 கோடி பேருக்கு செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தாசப்பா ஆஸ்பத்திரி
அதன்படி கர்நாடகத்தில் பெங்களூரு டவுன்ஹாலில் உள்ள தாசப்பா ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு மாநகராட்சி சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தடுப்பூசி மருந்துகள் குறைந்த வெப்ப நிலையில் தான் வைக்க வேண்டும். இதற்காக குளு, குளு வசதியுடன் கூடிய பாதுகாப்பு பெட்டிகள், அறைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கு தடுப்பூசி மருந்துகளை கொண்டு செல்ல குளு,குளு வசதியுடன் கூடிய வாகனமும் வாங்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
அத்துடன் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல்முறையாக சந்தைக்கு வரும்பட்சத்தில் அதற்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்படலாம். இதனால் சிலர் அவற்றை திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில் தாசப்பா ஆஸ்பத்திரியில் உள்ள தடுப்பூசி சேமிப்பு மையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் தடுப்பூசி மருந்துகளை வைக்கும் பாதுகாப்பு பெட்டி, சேமிப்பு மைய அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story