தூத்துக்குடியில் தொடரும் கனமழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது


தூத்துக்குடியில் தொடரும் கனமழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
x
தினத்தந்தி 20 Nov 2020 5:22 PM GMT (Updated: 20 Nov 2020 5:22 PM GMT)

தூத்துக்குடி பகுதியில் பெய்த வரும் தொடர்கனமழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோரம்பள்ளம் குளம் நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சிலநாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

நேற்று முன்தினம் பகல் முழுவதும் வறண்ட வானிலை காணப்பட்டது. ஆனால் இரவில் தொடங்கி அதிகாலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.

ஓட்டப்பிடாரத்தில் அதிகபட்சமாக 118 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதே போன்று அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மழை நீர் அனைத்தும் காட்டாற்று வெள்ளமாக மாறி உப்பாற்று ஓடையில் கலந்தது.

இதனால் நேற்று காலையில் உப்பாற்று ஓடையில் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இந்த தண்ணீர் அனைத்தும் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. இதனால் 228 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளம் ஒரே நாளில் நிரம்பி வழிந்தது. குளத்தில் தற்போது 2.58 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குளம் உடையாமல் இருப்பதற்காக உபரி நீர் உப்பாற்று ஒடை மூலம் கடலுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அதன்படி கோரம்பள்ளம் குளத்தில் உள்ள 24 மதகில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு 335 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உப்பளங்கள் மூழ்கின

மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியிலும் மழை காரணமாக ஆங்காங்கே தெருக்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் தனசேகர் நகர் மெயின் ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டலத்தில் 11 இடங்களிலும், வடக்கு மண்டலத்தில் 28 இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் 23 இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் 13 இடங்களிலும் ஆக மொத்தம் 75 இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் மழைநீரை அகற்றுவதற்காக 102 மோட்டார்கள் பொருத்தப்பட்டு நீரை உறிஞ்சும் பணிகள் நடந்து வருகின்றன. அதே போன்று டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.

தூத்துக்குடியில் நேற்று காலையில் லேசான வெயில் அடித்தது. பின்னர் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தூத்துக்குடியில் உப்பளங்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூரில் 44 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டினம் 46, குலசேகரன்பட்டினம் 19, விளாத்திகுளம் 30, காடல்குடி 18, வைப்பார் 34, சூரங்குடி 42, கோவில்பட்டி 25, கழுகுமலை 16, கயத்தார் 43, கடம்பூர் 49, ஓட்டப்பிடாரம் 118, மணியாச்சி 63, வேடநத்தம் 20, கீழஅரசடி 8, எட்டயபுரம் 30, சாத்தான்குளம் 17.2, ஸ்ரீவைகுண்டம் 78, தூத்துக்குடி 14.2 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.

Next Story