மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை 72 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு


மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை 72 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2020 4:09 AM IST (Updated: 21 Nov 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 72 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆதங்கப்பட வேண்டாம் என்று அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 17-ந் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்னே கல்லூரிகளுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, கல்லூரியிலும் சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகளை அமரவைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கல்லூரி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 72 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆதங்கப்பட வேண்டாம்

பெங்களூருவில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு இடையே கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருவதற்கு தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் மாணவ, மாணவிகள் ஆதங்கப்பட வேண்டாம் என்றும், முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதுடன், கல்லூரிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் இன்னும் சில நாட்களில் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் மல்லேசப்பா தெரிவித்துள்ளார்.

Next Story