போதைப்பொருள் கும்பலுக்கு உதவிய சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டு கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி


போதைப்பொருள் கும்பலுக்கு உதவிய சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டு கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 20 Nov 2020 10:52 PM GMT (Updated: 20 Nov 2020 10:52 PM GMT)

போதைப்பொருள் கும்பலுக்கு உதவியதாக பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு, 

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, முன்னாள் மந்திரி ருத்ரப்பா லமானியின் மகன் தர்ஷன் லமானி உள்பட 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் டார்க்நெட் மூலமாக போதைப்பொருட்களை ஆர்டர் செய்து அவற்றை கூரியர் மூலமாக பெங்களூருவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி சாம்ராஜ்பேட்டையில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வந்த பார்சலில் 500 கிராம் ஹைட்ரோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சதாசிவநகரை சேர்ந்த சுஜய், சுனேஷ், பிரசித் ஷெட்டி, ஜெயநகரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

போலீஸ் ஏட்டு கைது

இந்த நிலையில் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றும் பிரபாகர் என்பவர், போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹைட்ரோ கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததாகவும், தர்ஷன் லமானி உள்ளிட்டவர்களை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் போதைப்பொருள் வழக்கில் கைதானவர்களுக்கு விசாரணை பற்றிய தகவலை கசிய விட்டதாகவும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 12-ந் தேதி பிரபாகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

மேலும் பிரபாகர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விசாரணை தகவலை பிரபாகர் கசிய விட்டதும், அவர் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு உதவி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று மதியம் பிரபாகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உதவியதாக போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story