கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி ஏ.கே.டி.ஆறுமுகம் ஆதரவாளர்கள் சாலை மறியல்
கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி ஏ.கே.டி.ஆறுமுகம் ஆதரவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மூலக்குளம்,
புதுவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம். இவரது வீடு முதலியார்பேட்டை வயல்வெளி நகரில் உள்ளது. இவர் நேற்றுமுன்தினம் இரவு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வீடு அருகே சென்றபோது வழிமறித்த ஒரு கும்பல் காரில் கல்வீசி அவரை கொலை செய்ய முயன்றது. ஆனால் சுதாரித்துக்கொண்ட கார் டிரைவர் காரை லாவகமாக ஓட்டிச் சென்றதால் ஏ.கே.டி.ஆறுமுகம் உயிர் தப்பினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட மாந்தோப்பு சுந்தர் கொலைக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
சாலை மறியல்
கொலை முயற்சி குறித்த தகவல் அறிந்த ஏ.கே.டி.ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நேற்று வழுதாவூர் சாலையில் உள்ள மேட்டுப் பாளையம் 4 முனை சந்திப்பு அருகே திரண்டனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இதனால் வழுதாவூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களிடம் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
அப்போது ஏ.கே.டி.ஆறுமுகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதுடன் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் வழுதாவூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story