வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் ஆர்வமுடன் விண்ணப்பித்த இளம் வாக்காளர்கள்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் ஆர்வமுடன் விண்ணப்பித்த இளம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 22 Nov 2020 10:01 AM GMT (Updated: 22 Nov 2020 10:01 AM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த சிறப்பு முகாமில் ஆர்வமுடன் இளம்வாக்காளர்கள் விண்ணப்பித்தனர்.

புதுக்கோட்டை, 

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. இதில் இளம் வாக்காளர்கள் 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இதேபோல புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சரியாக உள்ளதா? எனவும், அதில் ஏதேனும் தவறிருந்தால் திருத்தவும் விண்ணப்பித்தனர். புதிதாக வாக்காளர்களை சேர்க்கும் பணியில் அரசியல் கட்சியினரும் மும்முரமாக ஈடுபட்டனர். புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமில் இளைஞர், இளம்பெண்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பித்தனர்.

விண்ணப்ப படிவங்கள்

புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமினை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரம் அளிக்கலாம். மேலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 12-ந் தேதியும் (சனிக்கிழமை), 13-ந் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அளிக்கலாம். பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஓரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8யு-லிலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பொன்னமராவதி தாலுகா காரையூர் பகுதிக்குட்பட்ட மேலத்தானியம், ஒலியமங்கலம், இடையாத்தூர், சடையம்பட்டி, மறவாமதுரை, நல்லூர், அரசமலை, உட்பட பல்வேறு பகுதிகளில் இளம்வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்று விண்ணப்பித்தனர்.

Next Story