ரவுடிகள் களை எடுக்கும் பணி தொடக்கம்: கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கைது
ரவுடிகள் களையெடுக்கும் பணி தொடங்கியதையொட்டி, திருச்சியில் கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாநகரில் ரவுடிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்கள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் இருப்பிடம், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றும், குற்றவாளிகளுடனான தொடர்பில் உள்ளனரா? என்றும் உளவு பார்க்கப்பட்டு வருகிறது.
சந்தேகத்திற்குரிய நபர்களை கைது செய்யும் படலம் தொடங்கி விட்டது. மேலும் மாநகரில் கஞ்சா விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் சிறையில் தள்ளவும் மாநகர போலீசார் முயற்சி செய்து வருகிறார்கள்.
கஞ்சா விற்ற 7 பேர் கைது
இந்த நிலையில் திருச்சி கேம்ஸ்டவுன் ரெயில்வே டிரக் பகுதியில் தினகரன் (வயது 40), கல்மந்தை பகுதியில் தாராநல்லூரை சேர்ந்த ரமேஷ் (41), ஸ்ரீரங்கம் பகுதியில் மூலத்தோப்பை சேர்ந்த கார்த்திகேயன் (24), திருவானைக்காவலை சேர்ந்த மகாமுனி (27), தென்னூர் அண்ணாநகரில் தேவராஜ் (28) ஆகியோர் கஞ்சா விற்றதாக திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். இதுபோல எடமலைப்பட்டி புதூர் புதுத்தெரு தண்ணீர் தொட்டி அருகில் கஞ்சா விற்றதாக ரஜினி (44), மன்னார்புரம் ரவுண்டானாவில் கஞ்சா விற்ற காந்தி நகரை சேர்ந்த கோபிநாதன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 580 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
பணம் பறித்த ரவுடி
இதற்கிடையே திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே வடை கடை நடத்தி வரும் செல்லப்பாண்டியை (37) கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ வழிப்பறி செய்த மேலகொண்டையம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என்ற நாகராஜை (30) ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். கைதான ரவுடி நாகராஜ் மீது ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், 4 கொலை மிரட்டல் வழக்கு கள் என 6 வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story