வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் நடக்கிறது
x
தினத்தந்தி 22 Nov 2020 2:41 PM GMT (Updated: 22 Nov 2020 2:41 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் இன்றும் நடக்கிறது.

மதுரை, 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கு முன்னோட்டமாக கடந்த 16-ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 26 லட்சத்து 7 ஆயிரத்து 693 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 12 லட்சத்து 84 ஆயிரத்து 99, பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 23 ஆயிரத்து 420 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 174 ஆகும்.

இந்த வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6, நீக்கம் செய்திட படிவம்-7, திருத்தம் செய்திட படிவம்-8, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8-ல் விண்ணப்பங்கள் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

மேலும் பொதுமக்களின் வசதிக்காக 21, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம்(டிசம்பர்) 12-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 1,115 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களை இணைத்து அளிக்க வேண்டும். 21 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் முகவரி மாற்றத்தின் காரணமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு முந்தைய வசிப்பிட முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை அளிக்க வேண்டும். மேலும் வேறு சட்டமன்ற தொகுதியிலும் பெயர் சேர்க்கப்பட வில்லை என்பதற்கான உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த முகாம் நடைபெறும் இடங்களில் கலெக்டர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். அவர் அமெரிக்கன் கல்லூரியில் நடந்த முகாமிற்கு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். முகாமில் பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே பொதுமக்கள் தங்களது பெயர் வரைவு பட்டியலில் இருக்கிறதா என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Next Story