விளம்பார்-தென்கீரனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் - குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


விளம்பார்-தென்கீரனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் - குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2020 9:34 AM IST (Updated: 23 Nov 2020 9:34 AM IST)
t-max-icont-min-icon

விளம்பார்-தென்கீரனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலிகாட்சி மூலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (ஊராட்சி) ரெத்தினமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், விளம்பார் மற்றும் தென்கீரனூர் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், காலநடைத் துறை மூலம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சின்னசேலம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கோலியாஸ் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தியாகதுருகம் வட்டார விவசாயிகள், நுண்ணீர் பாசனத்திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறும் கால அவகாசத்தை குறைக்க வேண்டும் என்றும், ரிஷிவந்தியம் வட்டார விவசாயிகள், சங்கராபுரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும், தரணி சர்க்கரை ஆலையை விரைவாக திறக்கவும் கோரிக்கை வைத்தனர்.

அதேபோல் உளுந்தூர்பேட்டை வட்டார விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்கள் பிரதம மந்திரியின் கிஷான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பெற்ற தொகையை பிடித்தம் செய்திடும் பணிகளை மட்டும் செய்யாமல் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களையும், தொழில் நுட்பங்களையும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருநாவலூர் வட்டார விவசாயிகள், கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏரிகளை தூர்வாரவும், உளுந்து பயிரில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்த தொழில் நுட்பங்களை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து விவசாயிகளும் முன் வைத்தனர்.

கூட்டத்தின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்திட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

Next Story