நெல்லை கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவார். தற்போது கொரோனா தொற்று காரணமாக இந்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறாமல் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.
மேலும் கலெக்டர் விஷ்ணு பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். காணொலி காட்சி மூலம் கோரிக்கையை சொல்ல இயலாத பொதுமக்கள் அங்குள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடுகின்றனர்.
பெண்கள் முற்றுகை
நெல்லை சிதம்பரநகர் குடியிருப்போர் நலவாழ்வு ஆரோக்கிய சங்கத்தினர் தலைவர் பெருமாள், செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில் அந்த பகுதி பெண்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை தீர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்குள்ள புகார் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர்.
அந்த மனுவில், ‘சிதம்பர நகர் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை. சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும் வடக்கு சிதம்பர நகர் பகுதியில் தெருக்களின் இருபுறங்களில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி செய்து தர வேண்டும். பஸ் வசதி செய்திட வேண்டும். சுடுகாட்டில் கொட்டகை, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
தற்காலிக செவிலியர்கள்
கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் செவிலியராக பணியாற்றிய பணியாளர்களை தற்போது பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். அந்த தற்காலிக செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் வந்து,‘ தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்’ என்று கோரி மனு கொடுத்தனர்
கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை, அணைத்தலையூர், ராஜபதி, துறையூர், ஆலடிப்பட்டி, நேதாஜி நகர் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதிக்கு கோவில்பட்டி நகராட்சிக்கு செல்லக்கூடிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோவில்பட்டி நகராட்சிக்கு வேறு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதால், நாங்கள் பயன்படுத்தி வந்த குழாய் பழுதடைந்த நிலையில் சரியாக சீரமைப்பு செய்யவில்லை. இதனால் எங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதிக்கு சீவலப்பேரியில் இருந்து தனியாக உறைக்கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
புதிரைவண்ணார் எழுச்சி பேரவையினர் மற்றும் பூர்வீக மக்கள் விடுதலை கட்சியினர் நெல்லை மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ‘தங்களுக்கு தடையில்லாமல் சாதி சான்று வழங்க வேண்டும்’ என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை அனைத்து கோவில் தசரா விழா கூட்டமைப்பினர் தலைவர் கனக சுப்பிரமணியன், செயலாளர் மனகாவலம் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘பாளையங்கோட்டை பட்டாளத்து மாரியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ள எருமைக்கடா மைதானத்தில் அமைந்துள்ள சுடலை ஆண்டவர் கோவில் முன்பாக தசரா காலத்தில் 12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து நின்று மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த இடம் ஆயிரத்தம்மன் கோவில் தசரா நிகழ்ச்சிக்கு உரிய இடம் என்று மாவட்ட வருவாய் அலுவலரால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தற்போது அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. கோவில் இடத்தில் அங்கன்வாடி மையம் கட்ட கூடாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியினர் மனு
இந்து மக்கள் கட்சியினர், தென்மண்டல இளைஞரணி தலைவர் மாரியப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சேரன்மாதேவியை சேர்ந்த பாலு மனைவி பாக்கியம் (வயது60). இவர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனது மகன் பிரதாப்ராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். அங்கிருந்து அடிக்கடி என்னிடம் போனில் பேசுவார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஊருக்கு வரவில்லை. கடந்த செப்டம்பர் 25-ந் தேதி முதல் எனது மகன் போனில் பேசவில்லை. இதுகுறித்து நான் அவருடன் வேலை பார்த்த ஒருவரிடம் கேட்டபோது,‘ உங்கள் மகன் 10 ஆண்டுகளாக ஊருக்கு வராததால், ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று முதலாளியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நீ ஊருக்கு போகக்கூடாது என்று கூறியதுடன், அவன்மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளதாக கூறினார். சவுதி அரேபியாவில் பொய் வழக்கில் சிறையில் உள்ள எனது மகனை சிறையில் இருந்து மீட்டு ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story