தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.
தென்காசி,
தமிழக மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் நேற்று தென்காசி வந்திருந்தார். தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் அவர் அலுவலர்களுக்கு இந்த சட்டம் குறித்து விளக்கமளித்தார்.
தகவல் கோரி விண்ணப்பிக்கும் மனு மீதான நடவடிக்கை, பொது தகவல் அலுவலருக்கான அதிகாரங்கள், பொது அதிகார அமைப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் வழங்கக்கூடிய தகவல்கள், தகவல் வெளியிடுவதில் இருந்து விலக்கப்பட்டவை மற்றும் இழப்பீடு தொடர்பான விதிமுறைகள் குறித்து அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், வருவாய் அலுவலர் கல்பனா, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல்காதர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வழக்கு விசாரணை
இதனை தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் இருந்த 25 வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினார்.
அதில் சம்பந்தப்பட்ட மனு கொடுத்தவர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் மனு கொடுத்தவர்கள் கூறுகையில், “தகவல் ஆணையர் இன்று தென்காசிக்கு வருவதை அறிந்து பல்வேறு மனுக்களுக்கு அலுவலகங்களில் இருந்து பதில்கள் வீடு தேடி வந்தன“ என குறிப்பிட்டனர்.
ரூ.50 ஆயிரம் அபராதம்
இந்த விசாரணையின்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் பாலாஜி என்பவர் நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் எப்போது வெளியேற்றப்படும்? இதன் நிலை என்ன? என்று 2016-ம் ஆண்டு கேள்வி கேட்டு தென்காசி சிற்றாறு வடிநில கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு பதில் கிடைக்கவில்லை. அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அதற்கும் பதில் வரவில்லை.
இதன்பிறகு அவர் முதல்- அமைச்சர், கவர்னர் உள்பட பல்வேறு நிலைகளில் புகார் செய்திருந்தார். ஆனால் அவருக்கு எந்த மனுவுக்கும் பதில் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மாநில தகவல் ஆணையத்தில் இதுகுறித்து மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அதில் பொதுப்பணித்துறை வரைபடவியலாளர் உதயகுமார் என்பவர் பதில் அனுப்ப வேண்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆணையர் பிரதாப் குமார் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அவர் மீது துறை ரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி
முன்னதாக தமிழக தகவல் ஆணையர் பிரதாப் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்கள் அனுப்பிய 13 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தற்போது 2 ஆயிரத்து 400 மனுக்கள் நிலுவையில் உள்ளன. கொரோனா காலத்திலும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து காணொலி வாயிலாக மக்களுக்கு தீர்வு காணப்பட்டது. தகவல் தெரிய விருப்பமுள்ளவர்கள் ஒரு அலுவலகத்தில் முதலில் இதற்காக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றால் அதன் மேல் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு அனுப்ப வேண்டும். உரிய விசாரணை அலுவலர் பதில் அளிக்காதது தெரியவந்தால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ரூ. 40 கோடியில் கட்டிடம்
தகவல் அறியும் உரிமை ஆணைய அலுவலகத்திற்கு சென்னை அண்ணாசாலையில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.40 கோடி செலவில் பிரம்மாண்டமான கட்டிடம் அரசு கட்டி உள்ளது. இந்த கட்டிடம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் திறக்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இதுபோன்று பெரிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதற்காக தமிழக அரசுக்கு இந்த ஆணையத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story