ஆலங்குளம் அருகே பயங்கரம்: லோடு ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை


ஆலங்குளம் அருகே பயங்கரம்: லோடு ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2020 5:58 AM IST (Updated: 24 Nov 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரை அடுத்த கடங்கநேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனைகுட்டி. இவருடைய மகன் சிவன்ராஜ் (வயது 23). டிரைவரான இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் பனையேறும் வேலைக் கும் சென்று வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் சிறிதுநேரத்தில் அதே ஊரைச் சேர்ந்த நண்பர்களான செல்வகுமார், இன்பராஜ் ஆகிய 2 பேரும் சிவன்ராஜின் வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த சிவன்ராஜை அவர்கள் மது குடிக்க அழைத்துச்சென்றனர்.

படுகொலை

ஆனால், இரவில் நீண்ட நேரமாகியும் சிவன்ராஜ் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள வயல்வெளியில் உள்ள கல்லறை மண்டபத்தில் ரத்தக்கறை படிந்து இருந்தது. மேலும் அங்குள்ள கிணற்றின் அருகில் சிவன்ராஜ் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. அவரது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட சிவன்ராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதன் விவரம் வருமாறு:-

பழிக்குப்பழி

கடங்கநேரி கிராமத்தில் முருகேசன், சேர்மன் ஆகிய இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சேர்மன் ஆதரவாளராக சிவன்ராஜ் செயல்பட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகேசன் ஆதரவாளரான சமுத்திரகனியை சிவன்ராஜ் அரிவாளால் வெட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் பழிக்குப்பழியாக சிவன்ராஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இதற்கு சிவன்ராஜின் நண்பர்களான செல்வகுமார், இன்பராஜ் ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். இந்த நிலையில் சிவன்ராஜை மது குடிக்க வருமாறு நண்பர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

அங்குள்ள வயல்வெளியில் உள்ள கல்லறை மண்டபத்தில் அனைவரும் மதுகுடித்தபோது, அங்கு மறைந்து இருந்த எதிர் தரப்பினர் உள்ளிட்ட மர்மநபர்கள் சிவன்ராஜை ஓட ஓட விரட்டிச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து தலைமறைவான செல்வகுமார், இன்பராஜ் மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து, பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆலங்குளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story