கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை


கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Nov 2020 3:02 AM IST (Updated: 25 Nov 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வியாபார சங்க பிரதிநிதிகளுடன் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கைகளை அவசியம் கழுவ வேண்டும் என்பதற்கான விளம்பரப் பலகையை கடையின் நுழைவு வாயிலில் வைத்திருக்க வேண்டும்.

உடல் வெப்ப பரிசோதனை

துணிக்கடைகள், நகைக்கடை மற்றும் இதர கடைகளில் வாடிக்கையாளர்கள் நுழைவதற்கு முன்பு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். திரவ சோப்பு கொண்டு கை கழுவுவதற்கு தனியே ஏற்பாடு செய்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கிருமிநாசினி கொண்டு கை கழுவுவதற்கு ஏதுவாக சானிடைசர் தெளிக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். அல்லது அப்பணியினை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். நேரடி பண பரிமாற்றத்திற்கு பதிலாக ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். வயதான முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை பணியில் அமர்த்துவது தவிர்க்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கடைகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தரைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பெரும் வியாபார நிறுவனங்களுக்கு வருபவர்களுக்கு முகக்கவசங்கள், சிறிய கிருமிநாசினி பாட்டில்கள் வழங்க வேண்டும். சளி,காய்ச்சல், இருமல் இருப்பவர்களை கடைகளுக்கு அனுமதிக்கக்கூடாது.

கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உரிய பாதுகாப்பு நெறி முறைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கவும், கடைபிடிக்காத பட்சத்தில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாநகர நல அலுவலர் சுகன்யா உதவி இயக்குனர் (ஊராட்சி) அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story