பெங்களூருவில், கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது 4 பேர் கைது
பெங்களூருவில் கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சமீபகாலமாக போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்காவில் இருந்து பார்சல்கள் மூலம் கூரியரில் போதைப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த போதைப்பொருட்கள் பெங்களூரு அம்ருதஹள்ளியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் இருப்பதாகவும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் கூரியர் நிறுவனத்திற்கு வந்த பார்சல்களில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அட்டை பெட்டியை திறந்து அதிகாரிகள் பார்த்தனர். அதில் பள்ளி குழந்தைகளின் புத்தக பைகள் இருந்தன. அந்த பைகளில் பார்த்த போது போதைப்பொருட்கள் இருந்தன.
ரூ.20 லட்சம்
இதையடுத்து புத்தக பைகளில் இருந்த 6 கிலோ 870 கிராம் எடையுள்ள போதைப்பொருட்களை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அந்த போதைப்பொருட்கள் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்காவில் இருந்து வந்தது தெரியவந்தது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருட்கள் பெங்களூருவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த சுக்லா, மரியா என்ற பெண்களின் பெயர்களும், பெங்களூருவில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒக்வார், ஒனோவா, ஆகியோரது பெயர்களுக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்காவில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை வாங்கி பெங்களூருவில் 4 பேரும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். கைதான 4 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story