கொரோனா தடுப்பூசி வினியோகம் தயார் நிலையில் 29,451 தடுப்பூசி மையங்கள் கர்நாடகத்தில் விரிவான ஏற்பாடுகள்


கொரோனா தடுப்பூசி வினியோகம் தயார் நிலையில் 29,451 தடுப்பூசி மையங்கள் கர்நாடகத்தில் விரிவான ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 25 Nov 2020 4:20 AM IST (Updated: 25 Nov 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில்இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

“கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவல் குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ய தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் 29 ஆயிரத்து 451 தடுப்பூசி மையங்கள் மற்றும் 10 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குளிர்பதன கிடங்குகள்

மாநிலத்தில் 2,855 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. அதில் தடுப்பூசிகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். மேலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் உள்ள குளிர்பதன கிடங்கு வசதிகளையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“உலக அளவில் 24 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. மொத்தம் 50 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 25 தடுப்பூசிகள் தற்போது பரிசோதனை நிலையில் இருக்கின்றன. அவற்றில் 5 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்ய இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

சுகாதார பணியாளர்கள்

நமது நாட்டுக்கு முதல் கட்டமாக 30 கோடி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அதில் முன்னுரிமை அடிப்படையில் 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அதன் பிறகு 2 கோடி கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி கிடைக்கும். அதைத்தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். ஒருவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கும் நிலை இருக்கும்.

முதலில் இந்த தடுப்பூசியை பெறுகிறவர்களின் முழு விவரங்கள், டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்கப்படும். 2-வது முறையாக தடுப்பூசி போடும்போது, அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளை அமைப்பது போல் இந்த தடுப்பூசி மையங்களை தயார்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். ஒருபுறம் தடுப்பூசி வழங்கினாலும் இன்னொரு புறம், கொரோனாவுக்கு எதிரான நமது போரின் வீரியத்தை குறைக்கக்கூடாது என்றும், அவற்றுக்கு எதிராக நாம் இதே அளவில் தீவிரமாக போராட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.”

இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் உயர் அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

Next Story