மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் கைது
மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரையில் இயங்கிய 3 தொண்டு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வட்டியில்லாத கடன் கொடுப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்வைப்பு தொகை மற்றும் ஆவண செலவுக்கு ரூ.6 ஆயிரத்து 100 செலுத்தினால், ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதை உண்மையென நம்பிய மகளிர் சுயஉதவிக்குழுவினர், நிலக்கோட்டை பகுதியில் இயங்கிய தொண்டு நிறுவனம் மூலம் பணம் செலுத்தினர். அந்தவகையில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பணம் செலுத்தினர். அதில் ஒருசிலருக்கு கடன் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
ஆனால், வங்கி கணக்கில் பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், தொண்டு நிறுவனத்துக்கு சென்ற போது அது மூடிக்கிடந்தது. மேலும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின்னரே கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. அந்த வகையில் சுமார் ரூ.1½ கோடி வரை மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
4 பேர் கைது
இதுதொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வத்தலக்குண்டுவை சேர்ந்த ராமகிருஷ்ணன், காசியம்மாள், மகாலட்சுமி, நிலக்கோட்டையை சேர்ந்த வடிவேல், மதுரையை சேர்ந்த ஜெயராஜ், ஆனந்த் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் காசியம்மாள், மகாலட்சுமி, ஜெயராஜ், ஆனந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வட்டியில்லாத கடன் கிடைக்கும் என்ற ஆசையில், திண்டுக்கல், மதுரையை சேர்ந்த பெண்கள் நிலக்கோட்டையை சேர்ந்த தொண்டு நிறுவனம் மூலம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம், என்றனர்.
Related Tags :
Next Story