அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்: சுற்றுச்சுவரை உடைத்து தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்று வழியாக கடலை சென்றடையும்.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதையடுத்து, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்று வழியாக கடலை சென்றடையும். தற்போது அடையாறு ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் கரைபுரண்டு செல்கிறது.
இதற்கிடையே மணப்பாக்கம் அடையாறு ஆறு அருகே பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அடையாற்றில் வந்த வெள்ளத்தினால் ஆற்று ஓரமாக இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் 20 அடிக்கு அடித்து செல்லப்பட்டது. இதில் 16 அடுக்குமாடி குடியிருப்பு கொண்ட கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்ததில், அடியில் இருந்த சிமெண்ட் தளங்கள் உடைந்து விட்டன.
இதையடுத்து, ஆலந்தூர் மண்டல மழைநீர் கண்காணிப்பு அதிகாரி நிர்மல்ராஜ், மண்டல அலுவலர் சீனிவாசன், செயற்பொறியாளர்கள் முரளி, ராஜசேகர் கொண்ட அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அங்கு வசித்த 16 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி அறிவுறுத்தியதன் பேரில், அங்கு வசித்த 16 குடும்பத்தினர் வீடுகளை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றனர். அடையாற்றில் மேலும் தண்ணீர் வரத்து அதிகமானால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story