நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 47-வது வட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் இந்துக்கல்லூரி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட பொறுப்பாளர் சேதுராஜா தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நிர்வாகிகள் தில்லைச் செல்வம், வக்கீல் உதயகுமார், சேக்தாவூது, பெஞ்சமின், சிவராஜ், சதாசிவம், சாகுல்ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், தொழிற்சங்க வேலை நிறுத்தம் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் அந்தந்த ஒன்றிய, நகர பகுதிகளான ஆரல்வாய்மொழி, இறச்சகுளம், நாகர்கோவில், தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம், தக்கலை, திங்கள்நகர் ஆகிய இடங்களில் வேலைநிறுத்த மறியல் போராட்டம் நடக்கிறது.
எனவே அந்தந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story