குமரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் 17 இடங்களில் சாலை மறியல் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 1,500 பேர் கைது
குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
அதாவது வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வராத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குதல் அவசியம். கட்டுமானம், முறைசாரா தொழிலாளர் நலவாரிய ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் விண்ணப்பித்தல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதோடு நேரடியாக விண்ணப்பங்கள் வாங்குவதை கைவிடக் கூடாது. பணபயன்களை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். குமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் முந்திரி, தோட்டம் உள்ளிட்ட சிறு குறு தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ரப்பர் கழக இடத்தை வனத்துறைக்கு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
17 இடங்களில் மறியல்
அதன்படி தொழிற்சாலை பணியாளர்கள், அரசு ரப்பர் கழக பணியாளர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கின.
இதுபற்றி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக தனியார் மற்றும் அரசு ரப்பர் தோட்டங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் பணிக்கு செல்லவில்லை. அங்கன்வாடி மையங்களுக்கு 2 ஆயிரம் பேரும், போக்குவரத்து கழகத்துக்கு 300-க்கும் மேற்பட்டவர்களும், கட்டுமான தொழிலுக்கு 10 ஆயிரம் பேரும் செல்லவில்லை“ என்றனர்.
குமரியில் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொழிற்சங்கங்கள் சார்பில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், விஜயதரணி
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. மாநில துணை செயலாளர் இளங்கோ, எச்.எம்.எஸ். மாநில அமைப்பு செயலாளர் முத்துகருப்பன், எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் ஜெரால்டு ஹெக்டர், ஏ.ஐ.டி.சி. மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட துணை தலைவர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
123 பேர் கைது
மறியல் போராட்டத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், விஜயதரணி உள்பட பலர் பேசினர். அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 123 பேரை கைது செய்தனர். அவர்களை வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
கருங்கல் தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 21 பெண்கள் உள்பட 78 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆஸ்டின் எம்.எல்.ஏ.
பறக்கை சந்திப்பில் நடந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் ராஜகுமார் தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். இதில் ராஜாக்கமங்கலம் வட்டார காங்கிரஸ் தலைவர் அசோக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென பறக்கை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 27 பேரை கைது செய்து அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.
இறச்சகுளம்
இறச்சகுளம் சந்திப்பில் தபால்நிலையம் முன் நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு.வை சேர்ந்த மகாதேவன், ஏ.ஐ.டி.யு.சி. அனில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். காங்கிரஸ் கிழக்கு மாவட்ட செயலாளர் சகாயராஜ், ம.தி.மு.க.வை சேர்ந்த மகாராஜபிள்ளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முருகன், ஸ்ரீகுமார் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோவாளை ஒன்றிய செயலாளர் மிக்கேல் தொடங்கி வைத்தார். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 27 பேரை போலீசார் கைது செய்து அருகில் இருந்த ஒரு தனியார் கல்லூரியில் தங்க வைத்தனர்.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. சக்திவேல், எல்.பி.எப். மகராஜ பிள்ளை, ஏ.ஐ.டி.யூ.சி. தயானந்தன், ஐ.என்.டி.யூ.சி. முருகானந்தம், ஹெச்.எம்.எஸ்.யை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்து அருகில் இருந்த ஒரு திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.
மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.
தக்கலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 31 பேரை தக்கலை போலீசார் கைது செய்து அருகில் இருந்த அரசு மேல்நிலை பள்ளியில் தங்க வைத்தனர்.
இதுபோல், குலசேகரம், களியக்காவிளை, குழித்துறை, கொல்லங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 இடங்களில் மறியல் நடந்தது. போராட்டத்தில் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story