தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாள் சுற்றுப்பயணம்


தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 27 Nov 2020 5:32 PM IST (Updated: 27 Nov 2020 5:32 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து 4 தொகுதி பொதுமக்களை நேரில் சந்திக்கிறார்.

ஈரோடு, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நமக்கு நாமே’, ‘எழுச்சிப்பயணம்’ என்ற தலைப்புகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பரப்புரை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த திட்டத்துக்கு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. முன்னணி தலைவர்கள் இந்த பயணத்தை தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே தி.மு.க. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தொடர்ந்து தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கவிஞர் கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பயணத்தை தொடங்கி உள்ளார். அவர் வருகிற 1 மற்றும் 2-ந் தேதிகளில் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளில் அவர் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

பொதுமக்களுடன் கலந்துரையாடல்

இதுதொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள சுற்றுப்பயண அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டிசம்பர் 1-ந் தேதி காலையில் கனிமொழி எம்.பி. தங்க இருக்கும் ஓட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியினரை சந்திக்கிறார். பின்னர் ஈரோடு முனிசிபல் காலனிக்கு வரும் அவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கு திருநங்கைகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதிக்கு வரும் அவர் காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். தொடர்ந்து ஸ்டோனி பாலம் பகுதிக்கு செல்லும் அவர் அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். அங்கிருந்து மணல்மேடு தி.மு.க. அலுவலகத்துக்கு சென்று மாற்றுத்திறனாளிகளை சந்தித்து பேசுகிறார்.

மாலை அணிவித்து மரியாதை

பின்னர் காளைமாடு சிலை அருகே ஆட்டோ, வேன், டாக்சி தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசுகிறார். குயவன் திட்டு பகுதிக்கு செல்லும் அவர் அங்குள்ள பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இதுபோல் நடராஜா தியேட்டர் பின்புறம் பகுதியிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டு, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து பன்னீர் செல்வம் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

வீரப்பன்சத்திரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். அங்கு நெசவாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சூளை பாரதி நகர் செல்லும் அவர் அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

பொல்லான் நினைவிடம் அமைப்பு

அன்றைய தினம் பிற்பகலில் அம்பேத்கர் சிலை அமைப்பு, பொல்லான் நினைவிடம் அமைப்பு தொடர்பாக அவை சம்பந்தப்பட்ட அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து கருத்துகள் கேட்கிறார். இந்த சந்திப்புக்கு பின்னர் அன்னை சத்யா நகர் சென்று அங்குள்ள பொதுமக்களை சந்திக்கிறார். பி.பி.அக்ரஹாரம் பகுதியிலும் பொதுமக்கள் சந்திப்பு நடக்கிறது. அங்கிருந்து ஆர்.என்.புதூர் செல்லும் அவர் தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை கேட்கிறார். இதுபோல் பெருமாள் மலையிலும் பொதுமக்களை சந்திக்கிறார்.

சித்தோடு ஆவின் பகுதியில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினரை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார். சித்தோடு நால்ரோட்டில் அந்த பகுதி மக்களை சந்திக்கிறார். பின்னர் எல்லீஸ்பேட்டை, பள்ளபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் சந்திப்பு நடக்கிறது. அங்கிருந்து காஞ்சிக்கோவில், நசியனூர் வழியாக செல்லும் அவர் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதுபோல் டிசம்பர் 2-ந் தேதி மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதி பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களையும் கவிஞர் கனிமொழி எம்.பி. சந்திக்கிறார்.

Next Story