நாமக்கல் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் சாலைமறியல் 442 பேர் கைது


நாமக்கல் மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் சாலைமறியல் 442 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2020 7:51 PM IST (Updated: 27 Nov 2020 7:51 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 442 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், 

விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று வேலைநிறுத்தம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் தலைவர் பழனியப்பன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தம்பிராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதை தொடர்ந்து மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் பஸ்களில் ஏற்றப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

442 பேர் கைது

இதேபோல் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், எருமப்பட்டி, மொளசி, பரமத்திவேலூர் என 8 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இவற்றில் 59 பெண்கள் உள்பட மொத்தம் 442 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர 6 இடங்களில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடந்தது.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம், தலைமை தபால் நிலையம் மற்றும் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story