தொழிற்சங்கத்தினர் மறியல்-முற்றுகை போராட்டம் 180 பெண்கள் உள்பட 845 பேர் கைது


தொழிற்சங்கத்தினர் மறியல்-முற்றுகை போராட்டம் 180 பெண்கள் உள்பட 845 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2020 2:58 PM GMT (Updated: 27 Nov 2020 2:58 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 180 பெண்கள் உள்பட 845 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 

மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 இடங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவை நடைபெற்றன. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் பாஸ்கரன், குருவேல், ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் சண்முகராஜன், லோகநாதன், இந்து மஸ்தூர் சபா தொழிற்சங்க நிர்வாகிகள் குமரகுருபரன், எல்.பி.எப். சங்கம்சார்பில் காஞ்சி ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் திரளாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வழிமறித்து 28 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.

திருவாடானையில் நடைபெற்ற போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் சந்தனம், விவசாயதொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் நாகநாதன், சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் நாகூர்பிச்சை, தொண்டி ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கலந்தர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பரமக்குடி

பரமக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார்.எச்.எம்.எஸ். பொறுப்பாளர் ஹாரிஸ், மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் வின்சன்ட் அமல்ராஜ், ஐ.என்.டி.யூ.சி.தொழிற்சங்க பொறுப்பாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க பொறுப்பாளர் பெருமாள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க நிர்வாகி செல்வராஜ், மின் அமைப்பாளர்கள் ஐக்கிய சங்க நிர்வாகி சுப்பிரமணியன், உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மத்திய -மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி சிலை முன்பு இருந்து ஊர்வலமாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் நடந்த போராட்டத்தில் கட்சியின் தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் கருணாமூர்த்தி அசோக் மாரிமுத்து மணிகண்டன், ஆரோக்கிய நிர்மலா, வெங்கடேஸ்வரி, ஞானசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்திய அனைவரையும் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தொழிற்சங்கங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல், வட கொரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தங்கச்சி மடத்தில் உள்ள வங்கியின் முன்பு போராட்டம் நடத்தியதாக தங்கச்சிமடம் ஏ.ஐ.டி.யு.சி.கிளைச் செயலாளர் டிரோஸ், துணைச் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், இன்னாசிமுத்து, பெனடிக் கணேசமூர்த்தி, உள்பட 28 பேரைபோலீசார் கைது செய்தனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் ராமநாதபுரம் உள்பட 16 இடங்களில் இந்த போராட்டங்கள் நடைபெற்றது. இவற்றில் 9 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 96 பெண்கள் உள்பட 437 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல 4 இடங்களில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 84 பெண்கள் உள்பட 408 பேரை போலீசார் கைது செய்தனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் முற்றுகை மற்றும் மறியலில் ஈடுபட்ட 180 பெண்கள் உள்பட 845 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story