மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொழிற்சங்கத்தினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொழிற்சங்கத்தினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 3:39 PM GMT (Updated: 27 Nov 2020 3:39 PM GMT)

கோவையில் மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, 

மத்திய அரசின் தொழிலாளர் சட்டதிருத்தம், வேளாண் சட்ட திருத்தம் ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடவடிக்கைக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமை தாங்கினார்.

தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தங்களை திரும்பப்பெற வழிவகை செய்ய வேண்டும் விவசாய சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் வருமானம் இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய அரசின் பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும், இயங்காமல் உள்ள தேசிய பஞ்சாலைகள் உடனடியாக இயக்க என்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு நின்றுகொண்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை இரும்பு தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆனாலும் போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்புகளை தாண்டி கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தபால் ஊழியர்கள்

இதேபோல சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி சுகுமார் தலைமையில் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் கோவை ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசின் பொது நிறுவனங்களை தனியார் மையமாக்கக்கூடாது என்று கோஷமிட்டனர். கோவை-திருச்சி ரோட்டில் எல்.ஐ.சி. ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 சதவீத பணிகள் பாதிக்கப்பட்டது.

எம்.பி. உள்பட 500 பேர் கைது

கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் துளசிதாஸ், பி.சண்முகம், கே.எம்.செல்வராஜ், சி.தங்கவேல், எச்.எம்.எஸ். ராஜாமணி, பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி. மு.தியாகராஜன், ரகுபு நிஸ்தார் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் வேன்களில் ஏற்றி மண்டபங்களில் கொண்டு சென்று தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். கோவையில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூலூர்

சூலூரை அடுத்த கலங்கல் பிரிவு திருச்சி சாலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியலில் ஈடுபட்டனர். இதில், ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் சாலையில் அமர்ந்தவாறு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் மவுனசாமி, மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. வேலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சூலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story