கோவிலில் அனுமதியின்றி கூட்டம்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்கு


கோவிலில் அனுமதியின்றி கூட்டம்; போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Nov 2020 11:15 PM GMT (Updated: 28 Nov 2020 11:15 PM GMT)

ஆண்டிமடம் அருகே கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் கிராமத்தில் விசுவநாதர் கோவில் உள்ளது. அகத்திய முனிவர் ஆண்டிக்கோலத்தில் ஆண்டிமடம் வந்து அதை சுற்றி உள்ள பகுதிகளில் 5 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டதாகவும், அதில் ஒன்று விஸ்வநாதர் கோவிலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து விசுவநாதர் ஆலய அறக்கட்டளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அறக்கட்டளையின் கவுரவ தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் கலைமணி, துணை தலைவர் பால்ராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜனநாயக முறையில் போராட்டம்

கூட்டத்தில், கோவிலுக்கு வருவதற்கு முன்பக்க வழியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதால், கோவிலுக்கு பின்பக்கம் வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்மேல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த பிரதோஷத்தின்போது ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவது. கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிந்து அதன் வாடகை மற்றும் ஆதாயங்களைப் பெற்று பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கோவிலை புனரமைத்து கட்டி கும்பாபிஷேகம் செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் துணை சூப்பிரண்டுகள் திருமேனி, தேவராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 300-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

பிரதோஷ நிகழ்ச்சி மற்றும் கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவம் ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு

இதையடுத்து அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக விசுவநாதர் ஆலய அறக்கட்டளையை சேர்ந்த ரவிச்சந்திரன், ரவி, வேல்முருகன், பத்மநாபன், பால்ராஜ், கலைமணி, ரமேஷ் கண்ணா, சுரேஷ், சிவக்குமார், நீலமேகம், மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் ராமு, மாவட்ட துணை தலைவர் கட்டபொம்மன், இந்து முன்னணியை சேர்ந்த மனோகரன் என 14 பேருக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story