சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகள் கைது போலீஸ் நிலையம் முற்றுகை


சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகள் கைது போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 29 Nov 2020 6:50 AM IST (Updated: 29 Nov 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே களிமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மூன்றாம் பாலின சிறுவன் திருநங்கையாக மாறுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் வசித்து வந்தான். இந்தநிலையில், திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் சத்யா, அபர்ணா ஆகியோர் அந்த சிறுவனை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், நீ திருநங்கையாக மாறுவதற்கு, தேவையான அறுவை சிகிச்சை செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக, ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி, கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 திருநங்கைகளுடன் சிறுவன் திருச்சிக்கு வந்தான். அவர்கள் அந்த சிறுவனை தங்கள் வீட்டில் தங்க வைத்தனர்.

பாலியல் தொழில்

பின்னர் அவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து, சித்திரவதை செய்துள்ளனர். மேலும் கடந்த 26-ந் தேதி இரவு திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே பழூர் பகுதியில் அந்த சிறுவனை பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதுடன் அவனுக்கு ரூ.500 கொடுத்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பித்ததுடன், டெல்லியில் உள்ள குழந்தைகள் நல ஆணையம் மற்றும் திருச்சி சைல்டு லைன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திருநங்கைகள் சத்யா, அபர்ணா மீது லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே திருநங்கைகளை கைது செய்த சம்பவம், அவர்கள் சார்ந்த குழுவினருக்கு தெரியவந்ததால், அவர்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். மேலும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கைத்தட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story