வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரத்து 787 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்


வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரத்து 787 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2020 11:40 AM IST (Updated: 29 Nov 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்துக்கு வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்துக்கு 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 787 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி,

தேனி பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் இந்த அறிக்கையை வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

நபார்டு வங்கி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 960 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து வருகிற 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 787 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டை காட்டிலும் வரும் நிதியாண்டுக்கான நிதி ஆற்றல் 13.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிதி ஆற்றல்

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த நிதி ஆற்றலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில், வேளாண்மை மற்றும் இணை தொழில்களுக்கு ரூ.5 ஆயிரத்து 462 கோடியே 51 லட்சமும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,324 கோடியே 96 லட்சமும் ஒதுக் கீடு செய்யப்பட்டு உள்ளது. வேளாண்மை மற்றும் இணை தொழில்களுக்கான நிதியில் பயிர்க்கடனாக மட்டும் ரூ.3 ஆயிரத்து 79 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திற்கு திட்டமிடலுக்கு தேவையான உள்ளீடுகளை நபார்டு வங்கி பெற்று தந்துள்ளது. வேளாண்மை சார்ந்த பணிகள், பண்ணை எந்திரமயமாக்கல், நீர் சேமிப்பு சாதனங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நிதி ஆற்றல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சிவக்குமார், நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் புவனேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் வங்கியாளர் கள் கலந்துகொண்டனர்.

Next Story