கோவில்பாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
கோவில்பாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சரவணம்பட்டி,
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவில்பாளையம் அருகே சக்தி ரோட்டில் சென்றுகொண்டிருந்தார். அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் சிவஞானம் மனைவியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து மர்ம நபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். உடனே அவரை சிவஞானம் பிடிக்க முயன்றார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இதற்கிடையில், கோவில்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரும் வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவஞானம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
மேலும், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தப்பி சென்றவர்களின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். இதில், மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்புராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் மோட்டார் சைக்கிளை தனது அண்ணன் புவனேஸ்வரனிடம் (வயது31) விற்றுவிட்டதாக கூறினார்.
இதனையடுத்து போலீசார் புவனேஸ்வரனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரியாஸ் அகமது (23), ரபிக் (22), கொடைக்கானலை சேர்ந்த இப்ராஹிம் (25) ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story