வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2020 10:45 PM GMT (Updated: 29 Nov 2020 7:45 PM GMT)

வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காந்தி காலனியைச் சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் வள்ளியூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வள்ளியூர் 1-வது வார்டில் உள்ள தேவர் கீழத்தெருவில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சுடலையாண்டி மகன் சிவபாலன் (24) என்பவர் குமாரிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த குமார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த நிலையில் பணியின் போது தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வள்ளியூர் நகர பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் நேற்று காலையில் ஏ.ஐ.டி.யு.சி. தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் எம்.எஸ்.மணியன் தலைமையில் பணிக்கு செல்லாமல் ஒட்டு மொத்தமாக அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு ராதாபுரம் தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், வள்ளியூர் நகர செயலாளர் வேம்பு சுப்பையா, விவசாய சங்க தாலுகா செயலாளர் கலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் மற்றும் பஞ்சாயத்து தலைமை எழுத்தர் கார்த்திகா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பணியின்போது உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து பணிக்கு சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story