அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் கோவில்களில் கார்த்திகை மகா தீபம் பிரம்மரிஷிமலையில் 1,008 மீட்டர் திரியில் ஏற்றப்பட்டது


அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் கோவில்களில் கார்த்திகை மகா தீபம் பிரம்மரிஷிமலையில் 1,008 மீட்டர் திரியில் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 29 Nov 2020 10:59 PM GMT (Updated: 29 Nov 2020 10:59 PM GMT)

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் கார்த்திகை மகாதீபம் ஏற்பட்டது. பிரம்மரிஷிமலையில் 1,008 மீட்டர் திரியில் தீபம் ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மரிஷி மலை உச்சியில் நேற்று மாலை 6 மணி அளவில் பெரிய செம்பு கொப்பரையில் 1,008 மீட்டர் திரி, 300 கிலோ நெய், ஆயிரம் லிட்டர் எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு, மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்திரம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி மாதாஜிரோகிணி ராஜகுமார், இலங்கை ராதா மாதாஜி முன்னிலையில் இளம் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் சுவாமி ஆகியோர் கார்த்திகை மகாதீபத்திற்கு ஆரத்தி வழிபாடு செய்து பூஜையை நடத்தினர். விழாவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள், சாதுக்கள், சிவனடியார்கள், குரு கடாட்சம் மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், மேலத்தெரு, பூக்கார தெரு மாரியம்மன் கோவில்கள், பெருமாள் கோவில், சிவன் கோவில்களில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் அகல்விளக்கு, ஐந்துமுக குத்து விளக்கு ஏற்றி வைத்து சிவ வழிபாடு செய்தனர். மேலும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்தனர். ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள கழுமலைநாதர் சுவாமி கோவிலிலும், ஜெயங்கொண்டம் அண்ணாசிலை பகுதியில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவில் போன்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக கருமலை நாதருக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள், திரவியபொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தி முடிந்த பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சொக்கப்பனைகொளுத்தப்பட்டது

ஆண்டிமடம் விளந்தையில் உள்ள மேலஅகத்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் கிரிவலம் நடைபெறும். இந்நிலையில் நேற்று பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மேல அகத்தீஸ்வரருக்கு பன்னீர், தேன், சந்தனம், பால், தயிர், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீசந்திரசேகரர் உடனுறை சிவகாமி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி சுற்றி வலம் வந்தது. பக்தர்கள் ஓம் நமசிவாயா என உச்சரித்தவாறு கிரிவலம் வந்தனர். கோவிலின் முன்பு 15 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பக்தர்கள் திரளாக திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் திருக்களப்பூர் திருக்கோடி வனத்தீஸ்வரர், கூவத்தூர் விசுவநாதர், விளந்தை அழகு சுப்பிரமணியர் ஆகிய கோவில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story