அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை பகுதிகளில் மது-புகையிலை விற்றதாக 8 பேர் கைது


அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை பகுதிகளில் மது-புகையிலை விற்றதாக 8 பேர் கைது
x

அரவக்குறிச்சி, நொய்யல், குளித்தலை பகுதிகளில் மது, புகையிலை பொருட்கள் விற்றதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் குடகனாறு பாலம் அருகே மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் அரவக்குறிச்சி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அரவக்குறிச்சி அருகே வரிக்காபட்டி ஊத்துக்கரையை சேர்ந்த முத்துச்சாமி (வயது 53) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி, மேலப்பட்டி பகுதிகளில் மது விற்ற ராமசாமி (60), வையாபுரி (70) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நொய்யல்

நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள பாலு என்பவரது தென்னந்தோப்பில் கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்த நெரூர் ஒத்தக்கடையை சேர்ந்த சிவக்குமார் (40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த கள் பானையுடன் பறிமுதல் செய்யப்பட்டன.

குளித்தலை

குளித்தலை நகரம் மற்றும் அய்யர்மலை பகுதியில் உள்ள பெட்டிக்கடை, மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக ரெங்கசாமி (35), ரகுபதி (48), சீனிவாசன் (46) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கடைகளில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

க. பரமத்தி

சின்னதாராபுரம் அருகே பள்ளப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 43). இவர் பள்ளப்பாளையம் கைகாட்டி முட்புதரில் மதுப்பாட்டில் விற்பதாக சின்னதாராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடமிருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story