அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அமைச்சர் காமராஜ் பேச்சு


அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2020 1:38 AM GMT (Updated: 30 Nov 2020 1:38 AM GMT)

அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

குடவாசல்,

நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசலில் நடந்தது. கூட்டத்திற்கு குடவாசல் (தெற்கு) ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைமணி, ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில், துணைத் தலைவர் தென்கோவன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் காமராஜ் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றிபெற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்து உங்களிடம் அ.தி.மு.க. எதிர்பார்க்கிறது. மக்கள் நம்மை முழுமையாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை நாம் காப்பாற்றி இதன் மூலம் வெற்றி பெற வேண்டும்.

3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி

அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க.வில் அடிப்படை தொண்டரும் மிகப்பெரிய பொறுப்புக்கு வர முடியும். இதற்கு நானே(அமைச்சர் காமராஜ்) ஒரு உதாரணம். சின்னஞ்சிறிய ஒரு கிராமத்தில் பிறந்த என்னை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என உயர்த்திய கட்சி அ.தி.மு.க. என்றாலும் அதை வழங்கியவர் அன்னை ஜெயலலிதா ஆவார். இதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நீங்கள். எனவே நான் எனது உயிர் உள்ளவரை இந்த நிலையை எப்போதும் மறக்கமாட்டேன். எப்போதும் உங்களுக்காகவும் இந்த மாவட்டத்துக்கும் பணி செய்து கிடப்பதே எனது கடமையாகும்.

தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் ஆகியோர் கடின உழைப்பாளிகள். அவர்கள் வெளிப்படையான மனிதர்கள். எனவே அவர்கள் எந்த திட்டத்தை தொடங்கினாலும் அதில் முழு வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார்கள். எனவே நாம் கடினமாக உழைத்து 3-வது முறையாக அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் குடவாசல் நகர அதிமுக செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

மன்னார்குடி

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வம், மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர்அரிகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் வரவேற்றார். முடிவில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் நன்றி கூறினார்.

Next Story