தேன்கனிக்கோட்டை அருகே யானையை கண்டு பயந்து ஓடிய பெண் தவறி விழுந்து சாவு


தேன்கனிக்கோட்டை அருகே யானையை கண்டு பயந்து ஓடிய பெண் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 30 Nov 2020 8:37 AM IST (Updated: 30 Nov 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானையை கண்டு பயந்து ஓடிய பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மனைவி மாரம்மா (வயது 40). இவரும், அதேபகுதியை சேர்ந்த 5 பெண்களும் தாவரைக்கரை காப்புக்காடு அருகே தொடப்பம் குச்சிகள் சேகரிக்க நேற்று முன்தினம் சென்றனர். அப்போது புதரில் இருந்து ஒரு காட்டு யானை திடீரென வெளியே வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாரம்மா உள்ளிட்ட 6 பேரும் பயந்து ஓடினர். இதில் தவறி கீழே விழுந்த மாரம்மா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

கோரிக்கை

பின்னர் அவர்கள் கிராம மக்கள் மற்றும் மாரம்மாவுடன் சென்ற பெண்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், இறந்த மாரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானையை பார்த்து மிரண்டு ஓடிய பெண் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காப்புக்காடு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை அங்கிருந்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story