பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 30 Nov 2020 3:29 AM GMT (Updated: 30 Nov 2020 3:29 AM GMT)

பழனி முருகன் கோவிலில், திருக்கார்த்திகையையொட்டி தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

பழனி,

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடாக விளங்கும் பழனியில், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 23-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 7 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது.

6-ம் நாளான நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு மூலவர் சன்னதி முன்பு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 7-ம்நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், உடன் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.

காலை 6.40 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு கால சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபம்

இதையடுத்து மலைக்கோவிலின் நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னக்குமாரர், தங்கமயில் வாகனத்தில், நின்ற விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சின்னக்குமாரருக்கு தீபாராதனை நடைபெற்றது. சொக்கப்பனை எரிந்த பின்பு கோவில் குருக்கள்கள் ‘அஞ்சன மை‘ எடுத்து மூலவருக்கு வைத்தனர். தொடர்ந்து சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது.

அதன் பிறகு மீண்டும் நின்ற விநாயகர் சன்னதி வந்த குருக்கள்கள், சின்னக்குமாரருக்கு ‘அஞ்சன மை‘ வைத்து தீபாராதனை காட்டினர். அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலிலும், பெரியநாயகி அம்மன் கோவிலிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்தி குமார் பதி துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் தாசில்தார் வடிவேல் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளக்கேற்றிய பக்தர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகம் தடை விதித்தது. அதன்படி மதியம் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அதிகாலையிலேயே பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவில் மட்டுமல்லாது திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் அதிகம் குவிந்தனர்.

மாலையில் நடைபெற்ற திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திருஆவினன்குடி கோவில் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

Next Story