சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து நட்டு இருந்த வாழை மரங்களை அகற்றி தற்காலிக சாலை அமைத்த கிராம மக்கள்


சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து நட்டு இருந்த வாழை மரங்களை அகற்றி தற்காலிக சாலை அமைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 30 Nov 2020 3:49 AM GMT (Updated: 30 Nov 2020 3:49 AM GMT)

ஒடுகத்தூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்து நட்டு இருந்த வாழை மரங்களை பொக்லைன் மூலம் அகற்றிய கிராம மக்கள், அதில் தற்காலிக சாலை அமைத்தனர்.

அணைக்கட்டு,

ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிடங்குதெரு மற்றும் சந்தைமேட்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அந்தப் பகுதியில் தனியாக சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. சுடுகாட்டையொட்டி சிற்றாறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் சுடுகாட்டுச் செல்லும் பாதையை ஆக்கிரமித்து, அதில் தென்னை, வாழை மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.

இதற்கிடையே, 6 மாதத்துக்கு முன்பு அப்பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். அவரின் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல பாதை வசதி இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தைத் தூக்கிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தால் சுடுகாட்டுக்குச் செல்ல பாதை அமைத்துத் தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் முதல், அனைவரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்று வரை சுடுகாட்டுக்குச் செல்ல பாதை அமைத்துத் தரவில்லை. நேற்று கிடங்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து சுடுகாட்டுக்குப் பிணத்தை எடுத்துச் செல்ல பாதை வசதியை செய்து தர வேண்டும், என எம்.எல்.ஏ. விடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். எம்.எல்.ஏ. நந்தகுமார் ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதனுக்கு உடனடியாக சாலை அமைத்துத்தர வேண்டும் என உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

தற்காலிக சாலை அமைத்தனர்

பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு ஒடுகத்தூர் நகர செயலாளர் கோவிந்தராஜ், அணைக்கட்டு முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சேரன் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் புண்ணியமூர்த்தி ஆகியோர் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு வந்து சுடுகாட்டுப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து நட்டு இருந்த வாழை மரங்களை அகற்றி, அதில் தற்காலிக சாலை அமைத்தனர். சுடுகாட்டுப் பாதையில் நிரந்தரமாக ஜல்லி கற்களை கொட்டி, தார் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Next Story