கடலூர் அருகே முட்புதரில் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை


கடலூர் அருகே முட்புதரில் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2020 5:45 AM GMT (Updated: 30 Nov 2020 5:45 AM GMT)

கடலூர் அருகே முட்புதரில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் தனியார் குடியிருப்பு பின்புறம் மலட்டாறு உள்ளது. இந்த மலட்டாற்றின் கரையோரம் முட்புதரில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் அவர் ரெட்டிச்சாவடி கரிக்கன் நகரை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி (வயது 60) என்பதும், இவர் மதலப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலகுருவின் உறவினர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை யாரேனும் கொலை செய்து வீசிச்சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றின் கரையோரம் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story