மீனவரை கொன்ற வழக்கில் 2 பேர் கோவையில் சரண்; அடைக்கலம் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டார்


சண்முகம்; தர்மர்; முருகநாதன்
x
சண்முகம்; தர்மர்; முருகநாதன்
தினத்தந்தி 30 Nov 2020 10:42 PM GMT (Updated: 30 Nov 2020 10:42 PM GMT)

மீனவர் கொலை வழக்கில் 2 பேர் கோவையில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டார்.

அடிக்கடி தகராறு
ராமநாதபுரம் மாவட்டம் அரியநாதபுரம் அடுத்த ஆப்பனூரை சேர்ந்தவர் முருகநாதன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வேலுசாமி என்பவரின் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதை வேலுசாமி தட்டி கேட்டார். இதனால் அவர் மீது முருகநாதனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இந்தநிலையில் அதேப்பகுதியை சேர்ந்த மாரந்தை மேல் குடியிருப்பு கடலாடியை சேர்ந்த சண்முகமும் (40), முருகநாதனும் கடந்த மாதம் 21-ந் தேதி துறைமுகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது முருகநாதன் தனது கொலை திட்டத்தை சண்முகத்திடம் கூறினார். அதற்கு அவரும் உதவி செய்வதாக உறுதியளித்தார்.

மீனவரை குத்தி கொன்றனர்
அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் வந்தார். அவர்கள் 2 பேரும் போதையில் இருந்ததால் அந்த நபர் வேலுசாமி என்று நினைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவருடைய முகத்தை பார்த்தபோதுதான் அது வேலுசாமி இல்லை வேறு ஆள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர், அதேப்பகுதியை சேர்ந்த மனோஜ் (24) என்பதும், மீனவரான அவர் மீன்பிடிக்க கடலுக்கு சென்று திரும்பியபோது முருகநாதன் மற்றும் சண்முகம் ஆகியோர் சேர்ந்து அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

போலீசில் சரண்
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகநாதன், சண்முகத்தை தேடி வந்தனர். அங்கிருந்து தப்பிய 2 பேரும் கோவை வந்தனர். பின்னர் சாய்பாபா காலனியில் உள்ள தனது நண்பரான தர்மர் (48) என்பவரிடம் விவரத்தை கூறி அவருடைய வீட்டில் பதுங்கி இருந்தனர்.

ஆள்மாறாட்டத்தில் அப்பாவியை கொன்றுவிட்டோமே என்றும், போலீசார் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் நேற்று காலை சாய்பாபாகாலனி போலீசில் சரண் அடைந்தனர். அத்துடன் அவருக்கு அடைக்கலம் கொடுத்த தர்மரும் போலீசில் சரண் அடைந்தார்.

3 பேர் கைது
இதுகுறித்து போலீசார் துறைமுகம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சாய்பாபகாலனி விரைந்து வந்து, முருகநாதன், சண்முகம், தர்மர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்றனர்.

Next Story