அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும் திட்டங்களால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன அமைச்சர் பேச்சு


அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும் திட்டங்களால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2020 7:45 AM IST (Updated: 1 Dec 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும் திட்டங்களால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சேகர், பாஸ்கர், நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம். பேரவை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். பேரவை செயலாளர் முகமது அஷ்ரப், நிர்வாகிகள் ரயில்பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் ஏழை, எளிய மாணவர்கள் சத்தான உணவுடன் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பார்த்து இந்தியாவே வியந்து போகிறது.

வளர்ச்சி பாதை

எம்.ஜி.ஆர். வழியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பான திட்டங்கள் மூலம் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றனர். அந்த வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சிறப்பான செயல்பாடுகளால் இந்திய அரங்கில் தமிழகத்தை முதலிடத்தில் இடம் பெற கடுமையாக உழைத்து வருகிறார். அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும் திட்டங்களால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது தொழிலை விஸ்தரிக்க முன் வருகின்றன. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் வாக்குச்சாவடி முகவர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வாக்காளர் சேர்க்கை முகாம் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கை நடைபெற வாக்குச்சாவடி முகவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் வாக்குச்சாவடி முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து அரசின் திட்டங்களை அவர்களிடத்தில் எடுத்துரைத்து ஆதரவு திரட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வேலூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை, தீவனப்புல் கரணை, தீவன விதை ஆகியவைகளை வழங்கி பேசினார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தனபாலன், வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குனர் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், தாசில்தார் ஜெகதீசன், நிலவள வங்கித்தலைவர் சிங்காரவேல், நகர வங்கி தலைவர் சண்முகசுந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் நேற்று மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற உறுப்பினர் கவுசல்யா தங்கமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காரிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதில் முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறுகையில், 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க. இன்று உதயநிதி ஸ்டாலின் கட்சியாக மாறி உள்ளது. ஆனால் அ.தி.மு.க, அ.தி.மு.க.வாகதான் இருக்கிறது என்றார்.

Next Story