வடகிழக்கு பருவமழை: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் கலெக்டர் ராமன் தகவல்


வடகிழக்கு பருவமழை: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம் கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2020 5:20 AM GMT (Updated: 1 Dec 2020 5:20 AM GMT)

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம்,

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அதாவது நடுவனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்டர்குல மாணிக்கம் கிராம அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ராமன் பார்வையிட்டார். பின்னர் காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி, ஊஞ்சக்காடு பகுதியில் ரூ.8½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

குடிநீர் இணைப்பு

அ.புதூர் ஊராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பில் கட்டப்படும் மகளிர் சுய உதவிக் குழு கட்டிட பணியையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.71 கோடி மதிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பணிகள் நடைபெற்று வருவதையும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், தங்காயூர் ஊராட்சியில் ரூ.1.81 கோடி மதிப்பில் 1,719 வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்ற நிலையில், சேலம் மாவட்டத்தில் அனைத்து ஊரக, நகர்புற, உள்ளாட்சி பகுதிகளிலும், மாநகர பகுதிகளிலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு

மேலும் கொசுப்புழுக்கள் உருவாகுவதை தடுக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், துணை இயக்குனர் செல்வகுமார், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி, உதவி செயற்பொறியாளர் அருள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story