‘குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகளிடம் 2-வது தாயாக இருங்கள்’ போலீசாருக்கு, டி.ஐ.ஜி. முத்துசாமி வேண்டுகோள்


‘குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகளிடம் 2-வது தாயாக இருங்கள்’ போலீசாருக்கு, டி.ஐ.ஜி. முத்துசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Dec 2020 6:23 AM GMT (Updated: 1 Dec 2020 6:23 AM GMT)

‘குற்றங்களில் ஈடுபட்ட குழந்தைகளிடம் போலீசார் 2-வது தாயாக இருக்க வேண்டும்‘ என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டுக்கல்,

இளம்சிறார் நீதி அமைப்பு சார்பில், குழந்தைகள் நல போலீஸ் அதிகாரிகளுக்கான கருத்தரங்கு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கினார். மாவட்ட நீதிபதி ஜமுனா, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் மாவட்ட நீதிபதி ஜமுனா பேசியதாவது:-

முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனை இருந்தது. ஆனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சிறுவர்கள், பெரியவர்களின் மனநிலை வெவ்வேறானது. இதனால் சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டோர், அறியாமல் தவறு செய்வதே அதிகம் என்று ஆய்வில் உறுதியாகி இருக்கிறது.

இதனால் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இளம்சிறார் நீதி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குழந்தைகளை கையாள்வதில், போலீசாரின் பங்கு மிகவும் அவசியமானது. குழந்தைகள் குடும்பம், பொருளாதார பின்னணி, சமூக கட்டமைப்பு போன்றவற்றால் அறிந்தோ அல்லது அறியாமலோ குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகைய குழந்தைகளை சட்டத்துக்கு உட்பட்டு போலீசார் கையாள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2-வது தாயாக இருங்கள்

கருத்தரங்கில், விழிப்புணர்வு பிரசுரங்களை வெளியிட்டு போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி பேசுகையில், பொதுவாக குழந்தைகள் தாய், தந்தை, நட்பு, சமுதாயம் என வளர்கின்றனர். குற்றம் செய்த குழந்தைகளுக்கு, போலீசார் 2-வது தாயாக இருக்க வேண்டும். அந்த குழந்தைகள் நல்லவர்களாக மாறுவதும், குற்றவாளிகளாக தொடர்வதும் போலீசாரின் கையில் தான் இருக்கிறது. குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் போலீசார், மூளையில் இருந்து முடிவு எடுக்காமல், மனதில் இருந்து முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகளை கையாளும் போது போலீசார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், என்றார்.

இதில் மகளிர் கோர்ட்டு நீதிபதி புருஷோத்தமன், இளம்சிறார் நீதிக்குழுமத்தின் முதன்மை மாஜிஸ்திரேட்டு முருகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளைச்சாமி, இனிகோ திவ்யன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story