வருகிற சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் மட்டுமே ஆளுமைமிக்க நல்லாட்சியை தர முடியும்


வருகிற சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் மட்டுமே ஆளுமைமிக்க நல்லாட்சியை தர முடியும்
x
தினத்தந்தி 2 Dec 2020 8:32 AM IST (Updated: 2 Dec 2020 8:32 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் டி.டி.வி. தினகரனால் மட்டுமே ஆளுமைமிக்க நல்லாட்சியை தர முடியும் என்று அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் பேசினார்.

விழுப்புரம்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மண்டல பொறுப்பாளரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பாலசுந்தரம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அ.கவுதம்சாகர் அனைவரையும் வரவேற்றார். மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார், மீனவர் அணி இணை செயலாளர் கருணாநிதி, வக்கீல் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாநில மருத்துவ அணி செயலாளர் முத்தையா, அமைப்பு செயலாளர் பாலமுருகன், செய்தி தொடர்பாளர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர் ஆர்.பாலசுந்தரம் பேசியதாவது:-

நல்லாட்சி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகவும் சிறப்பாக பணியாற்றியபோதிலும் மின்னணு வாக்கு எந்திரத்தில் செய்த கோளாறினால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே நாடாளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்றினோமோ அதைவிட நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் கடுமையாக உழைக்க வேண்டும்.

டி.டி.வி. தினகரனால் மட்டுமே முழுமையான ஆளுமைமிக்க நல்லாட்சியை தர முடியும் என்ற நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினாரோ அதுபோல் டி.டி.வி.தினகரனின் குணாதிசயங்களை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள்.

அரசியல் மாற்றம்

இந்த தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். இன்னும் 2 நாட்களில் பெங்களூருவில் இருந்து ஒரு புயல் தமிழகத்திற்கு வர இருக்கிறது. சசிகலா வந்ததும் எத்தனை கட்சிகள் காணாமல் போய்விடும் என்று தெரியவில்லை. அ.தி.மு.க. நமது பட்டியலில் இல்லை, பாதிக்கப்பட போவது தி.மு.க.தான்.

முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. சசிகலா வந்ததும் இந்தியாவே எதிர்பாராத அரசியல் மாற்றம் தமிழகத்தில் ஏற்படும். பழனிசாமி, பன்னீர்செல்வம் கம்பெனியும், தி.மு.க.வும், இந்த தேர்தலோடு இருந்த இடமே தெரியாமல் போகப்போகிறார்கள். அந்தளவிற்கு நாம் அயராது பணியாற்ற வேண்டும். வருகின்ற காலம் நம்முடைய காலமாக இருக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மெடிக்கல் ராஜ், மாவட்ட துணை செயலாளர் பார்த்திபன், பொருளாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகரன், கண்டமங்கலம் ரமேஷ், சுபாஷ், கோழிப்பட்டு ரமேஷ், அய்யனார், கோதண்டம், கதிர்வேல், ரங்கநாதன், சரவணன், ஜெயபால், நகர செயலாளர்கள் சக்திவேல்முருகன், நாகராஜ், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story